ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே குட்டையில் விழுந்த ஒற்றை யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதிக்கு இடம்பெயர செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் 50 க்கும் மேற்பட்ட யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. இதில் சில யானைகள் உணவு தண்ணீர் தேடி தனித்தனியாக பிரிந்து சென்று வனத்தையொட்டி உள்ள விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது.
அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பதும் கிணற்றில் விழுவது என்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. அதே போல் இந்தாண்டு கோடைக்கு முன்னரே கடும் வெயில் உள்ளதால் வனப்பகுதிகளில் நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் மரம் செடிகள் காய்ந்து சருகாகி உள்ளதால் யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் ஊராட்சி முககரை எனும் பகுதிக்கு தண்ணீர் தேடி ஒற்றை யானை ஒன்று வந்தது.
அப்போது அங்கு ஆழம் குறைவாக இருந்த தண்ணீர் குட்டையில் யானை விழுந்தது. பின்னர் யானை குட்டையை விட்டு வெளியேற முடியாமல் தவித்தது. இதனை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.பின்னர் வனத்துறையினர் வந்து குட்டையின் ஒரு பகுதியில் சாய்வாக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் யானை அந்த வழியாக மேலே ஏறியது. பின்னர் வனத்துறையினர் அருகே இருந்த அடர்ந்த வனப்பகுதிக்கு யானையை இடம்பெயர செய்தனர்.