நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு பயந்து பணப் பலன்களை விரைவாக வழங்கும் அரசு அதிகாரிகள்!


மதுரை: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு பயந்து அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவசர அவசரமாக பணப் பலன்களை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவுகள் நிறைவேற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி அதே நீதிபதி முன்னிலையில் அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் போக்குவரத்துத் துறை, கல்வித் துறை தொடர்பான வழக்குகளில் நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவுகள் செயல்படுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கலாகி வருகின்றன.

அந்த வழக்குகள் விசாரணைக்கு வரும் போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை நீதிபதி கண்டித்து அபராதம், சிறைத் தண்டனை விதித்தும், உத்தரவை நிறைவேற்ற காலக்கெடு விதித்தும் உத்தரவு பிறப்பிக்கிறார். தனி நீதிபதியின் தண்டனையை எதிர்த்து உடனடியாக இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்து சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தும், தடை விதித்தும் உத்தரவு பெறப்படு கிறது.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பணப் பலன்கள் வழங்கும் நடவடிக்கை போக்குவரத்துக் கழகத்தில் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்க காரணமான வழக்குகள் அகவிலைப் படி தொடர்பானது. வழக்கு தொடர்ந்தவர் 2024-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் 2023 ஜூன் முதல் பணப் பலன்கள் தரப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு காரணமாக 2024ல் ஓய்வு பெற்றவருக்கு அரசின் நிதியுதவியை எதிர்பாராமல் கும்பகோணம் போக்குவரத்துக் கழக நிதியிலிருந்தே வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஊதியம் மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகிய தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு போக்குவரத்து ஊழியரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவிடப் பட்டிருந்தது. அந்த ஊழியரும் 2024-ல் ஓய்வு பெற்றவர் தான். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு காரணமாக வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற பணியாள ருக்கான நிலுவைத் தொகை காசோலை மூலமாக உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள, குறிப்பாக நீதிபதி பட்டு தேவனாந்த் முன்னிலையில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ள போக்குவரத்து ஊழியர்களின் பட்டியல் சேகரிக்கப் பட்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பணப் பலன்களை விரைவாக வழங்கிவிட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப் பட்டதை தெரிவித்து நடவடிக்கையிலிருந்து தப்ப போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கேற்ப செயல்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் பட்டியலிடப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தொடர்புடைய பணப் பலன்கள் நிலுவைத் தொகையை மட்டும் அவசரம் அவசரமாக அதிகாரிகள் பட்டு வாடா செய்து வருகின்றனர். மற்ற நீதிபதிகள் முன்னிலையில் பட்டியலிடப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் வழக்கம் போல் தாமதப்படுத்தும் நடவடிக்கை யை தொடர்கின்றனர் என்றனர்.

x