டயாப்பர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு பல்லடம்- உடுமலை சாலையில் மறியல்


திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் டயாப்பர் தொழிற்சாலைக்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.வாவிபாளையத்தில் டயாப்பர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றுமுதல் (மார்ச் 26) தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள், பொதுமக்கள் அறிவித்தனர். அதன்படி, நேற்று காலை 8.30 மணிக்கு வே.வாவிபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “தனியார் டயாப்பர் தொழிற்சாலைக்கு, ஊராட்சியில் தனி அலுவலர் நியமிக்கப் பட்ட பிறகே கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆரஞ்சு வகை பட்டியலில் உள்ள இந்த தொழிற்சாலை யால், நிலத்தடி நீர் மாசுபடும். காற்று மாசுபாடு ஏற்படும். விவசாயமும் பாதிக்கப்படும். இந்த தொழிற்சாலை தொடங்க அனுமதிக்கக் கூடாது” என்றனர்.

போராட்டத்துக்கு ஆதரவாக விவசாய சங்கத் தலைவர்கள், அரசியல் கட்சியினர் பலரும் பங்கேற்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்லடம்- உடுமலை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பல்லடம் வட்டாட்சியர் சபரி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீஸார் அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் டயாப்பர் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி நிறுத்தி வைப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். இதையடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

x