மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசும் துறை தலைவர்: செய்யாறு அரசு கல்லூரியில் போராட்டம்


திருவண்ணாமலை: செய்யாறில் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் துறைத் தலைவருக்கு எதிராக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, கணினி அறிவியல், கணிதம், அறிவியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, அரசியல் அறிவியல், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் பாடப் பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்த கல்லூரியின் வரலாற்று துறைத்தலைவர் அரசியல் அறிவியல் துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். அவர், வரலாற்று துறை மாணவர்களை சமீப காலமாக அவதூறாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன் கல்லூரிக்கு வரும் திருமணமான மாணவிகளை அவமானப்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வரலாற்று துறை மாணவர்கள் நேற்று கல்லூரி முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், செய்யாறு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகவேலன் மற்றும் கல்லூரியின் முதல்வர் கலைவாணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, மாணவர்கள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்குள் சென்றனர். இதனால், அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

செய்யாறு அரசு கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று வரலாற்று துறை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் 2 துறைகளின் பேராசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக மாணவர்கள் திடீர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இந்த பிரச்சினைக்கு கல்வித்துறை உயர் அதிகாரிகள் விரைவில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்று சக கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் கோரிக்கையாக முன் வைக்கப்படுகிறது.

x