நெல்லையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவுக்கு, டிஜிபி மற்றும் சிபிஐ பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது மைதீன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் பிஜிலி, வக்பு போர்டு சொத்துகளை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பதற்காக போராடி வந்தார். அவர் கடந்த 18-ம் தேதி படுகொலை கொலை செய்யப்பட்டார். ஏற்கெனவே, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முகநூலில் வீடியோ வெளியிட்டிருந்த அவர், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக நெல்லை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
ஆனால், புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளுடன் சேர்த்து ஜாகிர் உசேனை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்காததால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், அவரது குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, ஜாகிர் உசேன் கொலை வழக்கின் தற்போதைய நிலை குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மனு தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தது