கோவை மாவட்டத்தில் 3 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்கல்


ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய காவலர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் உள்ளிட்டோர். 

கோவை: கோவை மாவட்ட காவல்துறை நிர்வாகத்தினர் இன்று (மார்ச்.26) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி தாலுகா, பொள்ளாச்சி கிழக்கு, மகாலிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ 9001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. காவல் நிலைய பதிவேடுகளை நல்ல முறையில் பராமரித்ததற்கும், பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுத்ததற்கும், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் விசாரணை செய்தல் ஆகியவற்றுக்காகவும் இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலைய அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியைப் பராமரித்தல் மற்றும் அவசர நிலைகளுக்கு பதிலளிப்பதில் சிறப்பான செயல்பாடு ஆகியவற்றுக்காக மேற்கண்ட 3 காவல் நிலையங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கண்ட காவல் நிலையங்களின் பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ததற்காக இந்திய தர கவுன்சிலிடமிருந்து பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பீட்டு QCI (WASH) விருதையும் இந்த காவல் நிலையங்கள் பெற்றுள்ளன. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன், ஐ.எஸ்.ஓ தரச்சான்று மற்றும் விருது பெற்ற மேற்கண்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட, பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங், பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரலேகா, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் மற்றும் மகாலிங்கபுரம் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறையினர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களின் பணியை பாராட்டினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x