கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மதுரை காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!


கடத்தல் வழக்கில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த மதுரை காவல்துறையினரை டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டினார்

மதுரை: மதுரையில் வழக்கறிஞர் கடத்தல் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு கடத்தல்காரர்களை கைது செய்த தல்லாகுளம் காவல்துறையினரை டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டினார்.

பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் கடந்த 23-ம் தேதி மதுரை தமுக்கம் பகுதியில் வைத்து ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்வேல், அவரது கார் ஓட்டுநர் லட்சுமணன் ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த செந்தில்வேல் உறவினர் ராஜ்குமார், அவரது நண்பர்கள் காரில் கடத்தினார்.

இச்சம்பவத்தில் தல்லாகுளம் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கடத்தப்பட்ட நபர்களை மீட்டு, குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களையும் கைது செய்தனர். இதில் துரிதமாக செயல்பட்ட காவலர்கள் விக்னேஷ்குமார், சேக் அப்துல் காதர், சுந்தரமூர்த்தி, பிரதீப்குமார், காமராஜ் ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, அவர்களை சென்னைக்கு நேரில் அழைத்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.


x