விதிகளை மீறும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை: கோவை  நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தல்  


கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கோவை: விதிகளை மீறும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள, மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச்.25) நடந்தது. மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பூங்கோதை(தெற்கு), பிரதீபா (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு பேசும்போது, “ஆட்டோ ஓட்டுநர்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர், பணியின் போது சீருடை அணியாமல் ஆட்டோவை ஓட்டுகின்றனர். சில தனியார் பேருந்துகளில் நடத்துநர்கள், பயணிகளிடம் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், பயணச்சீட்டை தருவதில்லை. தனியார் பேருந்துகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயணித்தால், அவர்களிடம் சில பேருந்துகளின் நடத்துநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

சில தனியார் பேருந்துகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் முழுமையாக செல்வது கிடையாது. கூட்டம் குறைவாக இருக்கும் சமயங்களில், வழித்தடத்தை குறைத்துக் கொள்கின்றனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பித்தாலும், இடைத்தரகர்கள் மூலம் வந்தால் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் முறையான பேருந்து நிறுத்தங்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். தனியார் பேருந்துகளின் பின் பகுதிகளில் இருக்கைகள் அகற்றப்பட்டு, பயணிகள் நின்றபடியே பயணிக்கும் நிலை உள்ளது. பேருந்துகளில் தடையை மீறி ஏர்ஹாரன்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கோவை நுகர்வோர் மையத்தின் தலைவர் வெங்கடேசன் பேசும்போது, “பல தனியார் பேருந்துகளில் மோட்டார் வாகனச் சட்டத்துக்கு புறம்பாக பேருந்தின் முன்புறம், பின்புறம், பக்கவாட்டுப் பகுதிகளில் கண் கூசும் விதத்தில் எல்.இ.டி பல்புகள் அலங்கார வளைவுகள் போல் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண் கூசும் நிலையும், விபத்துகள் ஏற்படும் நிலையும் உள்ளது.

தனியார் பேருந்துகளில் வழித்தட விவரம், கட்டண விவரப் பலகைகள் இல்லை. தனியார் பேருந்துகளில் நடத்துநர் தவிர, வேறு சில நபர்களும் இருந்து கொண்டு நடத்துநர் போல் செயல்பட்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சிகப்பு, நீல நிற விளக்குகளை தடையை மீறி பொருத்தியுள்ளனர். அதைத் தடுக்க வேண்டும்” என்றார்.

x