தருமபுரி: மாவட்ட பொறுப்பு அமைச்சரை மாற்ற வேண்டுமென அக்கட்சியில் இருந்தே வெளிப்பட்டிருக்கும் குரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது நேர்முக உதவியாளர் (தனி) தேவ் ஆனந்த் ஆகியோர் தருமபுரி மாவட்டத்தில் திமுக-வின் வளர்ச்சிக்கு வழி வகுக்காமல் கோஷ்டி பூசலை உருவாக்கி வருகின்றனர் என்றும், எனவே, அவர்கள் இருவரும் இனி தருமபுரி மாவட்டத்துக்கு வராத வகையில் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் சமூக வலை தளங்களில் பதிவிட்டிருந்தனர். இது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவ்வாறு பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தரப்பில் இருந்து தருமபுரி மாவட்ட காவல்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே.துரைசாமி, அயலக அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில் குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப் பாளர் சின்னசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாதையன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கோவிந்த ராஜ், சனத்குமார நதி பாதுகாப்புக் குழு தலைவர் கந்தசாமி உள்ளிட்டோரை நேற்று எஸ்.பி அலுவலகத்துக்கு போலீஸார் விசாரணைக்காக அழைத்திருந்தனர். இதற்காக ஆதரவாளர்களுடன் எஸ்.பி. அலுவலகத்துக்கு நிர்வாகிகள் வருகை தந்தனர்.
விசாரணைக்கு பின்னர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்.கே.துரைசாமி உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியது: குறைகளை கூறுங்கள் கட்சித் தலைமையிடம் தெரிவிக்கிறோம் என விசாரணையின் போது போலீஸார் கேட்டனர். கடந்த 4 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடவில்லை. அவரும், அவரது நேர்முக உதவியாளர் தேவ் ஆனந்த்தும் தருமபுரி மாவட்ட திமுக-வில் கோஷ்டி பூசலை ஏற்படுத்தி கட்சியை பலவீனப் படுத்தி வருகின்றனர்.
அமைச்சரும், அவரது உதவியாளரும் இந்த மாவட்டத்தை விட்டு சென்றால் தான் வரவிருக்கும் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற முடியும். இந்த உண்மை நிலையைத் தான் சமூக ஊடகங்களில் பதிவு செய்தோம் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளோம். திமுக-வின் நலன் கருதி தான் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை கட்சியின் தலைமைக்கும் புகாராக அனுப்ப உள்ளோம். இவ்வாறு கூறினர்.
தருமபுரி மாவட்ட திமுக-வினரிடம் இருந்தே திமுக அமைச்சர், அவரது உதவியாளர் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு, அது தொடர்பான போலீஸ் விசாரணை போன்ற சம்பவங்களால் தருமபுரி மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.