சேலத்தில் இளம்பெண் மர்ம மரணம்; கணவரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்


படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: இளம்பிள்ளை அருகே இளம்பெண்ணின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் கணவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் இளம்பிள்ளை அருகே உள்ள இ.காட்டூரைச் சேர்ந்தவர் மைனர் ராஜ் மனைவி சுந்தரி (28). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி வீட்டில் சுந்தரி மர்மமான முறையில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து சுந்தரியின் பெற்றோர் சின்னுசாமி-பெருமாயி மற்றும் உறவினர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சுந்தரி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், அவரின் இறப்புக்கு காரணமான கணவர் மைனர்ராஜ் மற்றும் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறிஇருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சுந்தரியின் உறவினர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலக ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டவுன் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சுந்தரி இறப்புக்கு காரணமான மைனர்ராஜ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை, ஆர்டிஓ அறிக்கை தர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக புகார் மனு தருமாறும், பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் போலீஸார் உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியல் போரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஆட்சியர் அலுவலகம் அருகே சற்று நேரம் போக்குரவத்து பாதிப்புக்குள்ளானது.

x