புதுச்சேரி காவல்துறையில் 516, விரிவுரையாளர் பணியிடங்கள் 475 நிரப்பப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்


அமைச்சர் நமச்சிவாயம் | கோப்புப் படம்.

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் 516, அரசு கல்லுாரிகளுக்கு 475 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்த நிலையில், பதிலளித்து உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: புதுச்சேரி மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் பல நல திட்டங்களை அளித்துள்ளோம். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைந்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் மாணவர்கள், இளைஞர்கள் முன்னேற்றம் அடைய அனைத்து செயல் திட்டங்களையும் வகுத்து செயலாற்றி வருகின்றோம்.

லாஸ்பேட்டை காவல்நிலைய கட்டுமான பணி விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். காவல் தலைமை அலுவலகம் கட்டிடம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்படும். கரிக்கலாம்பாக்கம் புறக்காவல்நிலைய பணிகள் தொடங்கப்படும். பல்வேறு காவல்நிலைய கட்டடங்கள் பழுது, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். காவல்துறையில் காலியாக உள்ள சப்இன்ஸ்பெக்டர்-70, காவலர்கள்-156, ஓட்டுநர்-7, சமையல்காரர்-17, பின்பற்றுபவர்-25, டெக் ஹேண்ட்லர்-29, வானொலி தொழில்நுட்பட வல்லுநர்-12, கடலோர ஊர்க்காவல்படை-200 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும்.

4 ஆண்டு நிலுவையில் உள்ள காவலர் சீருடை படி இந்த மாதத்தில் வழங்கப்படும். இந்திய ரிசர்வ் பட்டாலியனில் சப்இன்ஸ்பெக்டர்-12, வயர்லெஸ் காவலர்-12 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்கும். பயன்படுத்தாத வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும். ஐஆர்பிஎன் 2.0 திட்டம் கொண்டுவரப்படும். சிபிஎஸ்இக்கு மாறிய அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும். நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அதிகாரிகள் வசதி செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வுக்கு 4 சிறப்பு பயிற்சி மையம் அமைக்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வேலைநாட்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டிராக் சிஸ்டம் அடையாள அட்டை வழங்கப்படும். 126 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். 82 பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் விரிவுரையாளர்களாக பதவி உயர்த்தப்படுவர். 42 பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்படும். புதிதாக தேர்வான பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். 152 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும். 190 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 80 நுண்கலை, 50 நிகழ்கலை ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படுவர். 45 பள்ளி நுாலகர்கள், 36 உடல்கல்வி ஆசிரியர்கள், 110 ரொட்டி பால் ஊழியர்கள், 107 கண்டக்டர்கள், 102 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

2024-25 கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீடு இடங்களில் கல்லுாரிகளில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி, பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் தள்ளுபடி வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் பயன்பெறுவதுபோல பாரதிதாசன் பெண்கள் கல்லுாரி, புதுச்சேரி பல்கலைக்கழகம், அனைத்து நகர, கிராமப்புற கல்லுாரிகளுக்கு இலவச பேருந்து இயக்கப்படும். காரைக்காலிலும் கல்லுாரிகளுக்கு இலவச பேருந்து இயக்கப்படும். சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் விலக்கு அளிக்கப்படும். தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கப்படும்.

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 66 விரிவுரையாளர், 63 அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும். அரசு கல்லுாரிகளுக்கு தேவையான 283 விரிவுரையாளர், 63 அலுவலர்கள் பணியிடங்களும் நிரப்பப்படும். கரசூரில் கையகப்படுத்தப்பட்டு பிப்டிக் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலம் தொழில் முனைவோருக்கு இந்த ஆண்டுக்குள் ஒதுக்கீடு செய்யப்படும். ரோடியர் மில்லில் 5 ஏக்கரில் ரூ.124 கோடியில் ஏக் தா மால் கட்டப்படும். ரோடியர், சுதேசி, பாரதி ஆலை இடங்களில் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். மத்திய அரசின் கேளோ இந்தியா திட்டத்தின் கீழ் உப்பளம் விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சிந்தடிக் ஓடுதளம் ஏப்ரல் மாதம் திறக்கப்படும்.

சாரதாம்பாள் நகரில் ரூ.5.50 கோடியில் கட்டப்பட்ட நீச்சல்குளம் திறக்கப்படும். உப்பளம் மைதானத்தில் ரூ.9 கோடியில் ஆக்கி மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டப்படும். பாகூர் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் ஏப்ரலில் திறக்கப்படும். தேசிய, சர்வதேச, பிராந்திய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பயண செலவு, தேவையான செலவுகளை இந்திய விளையாட்டு ஆணையம் நிர்ணயித்தபடி வழங்கப்படும். சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு 2007 முதல் ஊக்கத்தொகை வழங்கவில்லை.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கவேண்டிய ஊக்கத்தொகை ரூ.9.38 கோடி. இது வரும் நிதியாண்டில் வழங்கப்படும். ஆயிரத்து 840 வீரர்கள் பயனடைவர். ஒவ்வாரு கொம்யூனுக்கும் சிறிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். விளையாட்டு பயிற்றுநர்கள், ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். பயிற்சியாளர்களுக்கு ஆணையத்தின் பரிந்துரைப்படி ஊதியம் உயர்த்தப்படும். வரையறுக்கப்பட்ட விதிகளின்படி விளையாட்டு சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

x