கோவை: பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்படும் நிலையில், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிறு இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் (06030) இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.அதேபோல், திங்கள் இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் (06029) இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில், போத்தனுார், கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கு பயணிகளிடம் வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், ரயில் சேவையை கடந்த மாதம் ரயில்வே நிர்வாகம் நிறுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப் பட்ட வாராந்தர ரயில் சேவையை நிறுத்தியது பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்படும் சூழலில், இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தாலுகா சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் கூறியதாவது: பொள்ளாச்சி வழியாக, தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் சூழலில், பயணிகளிடம் வரவேற்பு பெற்ற மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை நிறுத்தியது வேதனை அளிக்கிறது. இந்த ரயிலை பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல், தென்காசி, மதுரை, கடையநல்லுார், சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது கோடை விடுமுறை விடப்படும் சூழலில், இந்த வாராந்தர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள், சொந்த ஊருக்கு செல்வோர் ரயில் மூலம் செல்ல வாய்ப்பு ஏற்படும். ரயில்வே நிர்வாகம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் கடந்த 10ம் தேதி முதல் பார்சல் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை நிறுத்தப் பட்டதால், தொழில் முனைவோர் சிரமப்படுகின்றனர். இந்த சேவை யை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.