விருதுநகர்: விருதுநகரில் டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டிய பாஜக நிர்வாகிகள் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
மது விற்பனையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படங்களை ஒட்டி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பாஜகவினர் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர். இதையறிந்த விருதுநகர் பஜார் போலீஸார் அங்கு சென்று, ஒட்டப்பட்டிருந்த ஸ்டாலின் படத்தை அகற்றினர். மேலும், ஸ்டாலின் படத்தை ஒட்டியது யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, பாண்டியன் நகர் அருகே கே.கே.எஸ்.எஸ்.என் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை பாஜகவினர் ஒட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சென்ற பாண்டியன் நகர் போலீஸார், முதல்வர் ஸ்டாலின் படத்தை அகற்றினர். மேலும், இதுதொடர்பாக பாஜக விருதுநகர் மகளிர் அணி மாவட்டச் செயலாளர் ஜீவரத்தினம் (44), காரியாபட்டி பாஜக ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் (54) மற்றும் பாஜகவைச் சேர்ந்த சந்திரா (60) ஆகியோரை கைதுசெய்தனர்.