நாய் மீது பைக் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு; கும்பகோணத்தில் சோகம்


கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம் குறிச்சிமலையைச் சேர்ந்தவர் ஹாஜா முகம்மது மகன் ஹம்ஜித் (15). கும்பகோணம் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் விக்னேஷுடன் (15) இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் சென்றுவிட்டு, வீட்டுக்கு மீண்டும் புறப்பட்டனர். விக்னேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார்.

கல்யாணபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே நாய் புகுந்துள்ளது. இதில், நாய் மீது மோதி இருசக்கர வாகனம் சாலை யில் விழுந்தது. இதில் ஹம்ஜித், விக்னேஷ் ஆகியோர் பலத்த காயமைடந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து, ஹம்ஜித் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விக்னேஷ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்து தொடர்பாக திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஹம்ஜித்தின் சகோதரர் ஆசிக், தம்பி உயிரிழந்த நிலையில் நேற்று சோகத்துடன் சென்று பிளஸ் 2 தேர்வை எழுதினார்.

x