புதுச்சேரி: நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்காதது தொடர்பாக திமுக- பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசை எந்த அளவுக்கு முடியுமோ வலியுறுத்தி வருவதாக முதல்வர் ரங்கசாமி விளக்கம் தந்தார்.
பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கர், "மாநில உட்கட்டமைப்பை மேம்படுத்த 50 ஆண்டு காலத்துக்கு வட்டியில்லா கடன் தர மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசை அணுகுவீர்களா" என்றார்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி, "மத்திய அரசு அறிவித்தபோதே மூல தன முதலீட்டுக்காக மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குதல் திட்டத்தின் கீழ் புதுச்சேரியை கொண்டு வர மத்திய அரசை கோரியுள்ளோம். இத்திட்டம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு பொருந்தாது என்றுள்ளனர். இரு்தாலும் கோரிக்கைகள் வைத்துள்ளோம்" என்றார்.
அதையடுத்து நடந்த விவாதம்:
எம்எல்ஏ சிவசங்கர்: சமீபத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக்கை நிதி கமிஷனில் சேர்த்துள்ளனர். நீண்ட நாட்களாக இருந்தும் புதுச்சேரி சேர்க்கவில்லை.
முதல்வர் ரங்கசாமி: நீங்கள் இருந்தும் புதுச்சேரியை சேர்க்கவில்லை.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா: முதல்வர் நக்கலாக சொல்கிறார். நீங்கள் இருந்தும், பல முறை டெல்லி சென்றும் சேர்க்கவில்லை என கூறுகிறார். புதுச்சேரிக்கு நிதியை தரவில்லை என்கிறார்.
அமைச்சர் நமச்சிவாயம்: சாத்தியமான கோரிக்கைகளை மத்திய அரசு செய்கிறது.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா: நாங்கள் சொல்லிவல்லை. முதல்வர் பேரவையில் சொல்கிறார்.
நாஜிம் (திமுக)- தற்போது பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது.
இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள்- திமுக எம்எல்ஏக்கள் ஒரே நேரத்தில் பேசியதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது. லாட்டரி அதிபர் மார்டின் மகன் சார்லஸை அழைத்து வந்தது பற்றி திமுக பேச பாஜகவினர் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் நமச்சிவாயமும், திமுக எம்எல்ஏக்களும் வாயில் வடை சுடுவதாக மாறி மாறி குற்றம் சாட்டினர். அனைவரையும் பேரவைத்தலைவர் அமரசொன்னார்.
முதல்வர் ரங்கசாமி: கேட்ட கேள்விக்கு பதிலை சொன்னேன். மாநில நலனுக்காக மத்திய அரசை எந்த அளவுக்கு முடியுமோ வலியுறுத்தி கேட்கிறோம். கேட்கும் இடத்தில் கேட்கிறோம். கொடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தரும்போதுதான் பெறமுடியும். எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
எதிர்க்கட்சித்தலைவர்- வாங்கி தருவதாகக் கூறிதான் ஆட்சிக்கு வந்தும் ஏன் செய்யவில்லை.
இதனால் மீண்டும் பாஜக- திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில் சிவசங்கர் எம்எல்ஏ, "நிதிகமிஷன், மாநில அந்தஸ்து தேவை. தங்கள் தலைமையில் டெல்லிக்கு அழைத்து செல்லுங்கள்" என்று கேட்டதற்கு, முதல்வர் ரங்கசாமி,''கண்டிப்பாக வலியுறுத்துவோம்.'' என்றார்.