பேருந்தை நிறுத்தாமல் மாணவியை ஓடவிட்ட ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்: நடந்தது என்ன?


திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை தற்காலிக பணி நீக்கம் செய்தும், நடத்துநரை பணி நீக்கம் செய்தும் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் நேற்று உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்காயம் வரை அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்தில், பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் இலவச பயண அட்டையை பயன்படுத்தியும், மகளிர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்காயம் நோக்கி அரசு நகரப் பேருந்து நேற்று காலை புறப்பட்டது. இந்த பேருந்து ஆலங்காயம் சாலையில் உள்ள வேப்பமரத்து சாலை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும். அங்கு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். ஆனால், அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜ் என்பவர் பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்தாமல் வேகமாக இயக்கிச்சென்றார். இதனால், மாணவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

அங்கிருந்து புறப்பட்ட பேருந்தை அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் படம் பிடித்தபடி சென்றார். நகரப் பேருந்து அடுத்த பேருந்து நிறுத்தமான கொத்தக்கோட்டை என்ற இடத்தில் நிறுத்த வேண்டும். அங்கு 12ம் வகுப்பு தேர்வுக்காக செல்லும் அரசு பள்ளி மாணவி ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். ஆனால், நகரப் பேருந்து அங்கும் நிற்காமல் நேராக சென்றது. ஆனால், தேர்வுக்கு செல்ல வேண்டும் என்பதால் அந்த மாணவி பேருந்தை பின் தொடர்ந்து ஓடினார்.

பேருந்து நிற்காமல் செல்வதையும், மாணவி பின் தொடர்ந்து ஓடுவதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிடவே, பேருந்து ஓட்டுநர் சிறிது தொலைவு சென்று பேருந்தை நிறுத்தினார். அதன் பிறகு, அந்த மாணவி அந்த பேருந்தில் ஏறி தேர்வு எழுத புறப்பட்டார். இதனை கைபேசியில் வீடியோ எடுத்த நபர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ நேற்று காலை வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதைத்தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜை தற்காலிக பணிநீக்கம் செய்தும், ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்ட நடத்துநர் அசோக்குமார் என்பவரை பணியில் இருந்து விடுவித்தும் அரசு போக்குவரத்து பணிமனை பொது மேலாளர் கணபதி உத்தரவின் பேரில் ஆம்பூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கணேசன் நேற்று உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, மாற்று ஓட்டுநராக ராமலிங்கம் என்பவரையும், நடத்துநராக ஹரிஹரன் என்பவரை நியமித்து ஆலங்காயம் பகுதிக்கு அரசு நகரப் பேருந்து நேற்று இயக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "கிராமப் பகுதி வழியாக இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகள் உரிய இடத்தில் நிறுத்துவது இல்லை. குறிப்பாக, இலவச பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவ, மாணவிகளை கண்டால் அவ் வழியாக இயக்கக்கூடிய பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக இயக்கப்படுகின்றன.

தமிழக அரசு மகளிருக்கு இலவச பேருந்து எனக்கூறினாலும் அதை அரசு போக்குவரத்துக் கழகம் கிராமப் புற பகுதிகளில் கடைபிடிப்பது இல்லை. பெண்களை கூட்டமாக கண்டாலே பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடுத்துநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

x