புதுச்சேரி: திருநள்ளாறு ஆன்மீக பூங்காவில் சிவன், நவக்கிரக சிலைகள் அமைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சுயேட்சை எம்எல்ஏ சிவா, "திருநள்ளாறு கோயில் நகரத் திட்டப்படி நுழைவு வாயில் அமைக்கப்படுமா- ஆன்மீக பூங்காவில் சிலைகள் அமைக்கப்படுமா'' என்று கேட்டார்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி, "திருநள்ளாறு ஆன்மீகப் பூங்காவில் நவக்கிரகச் சிலைகள், சிவன் சிலை அமைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. மத்திய அரசு சுற்றுலா அமைச்சக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் வழிகாட்டுதலில் தெய்வங்களின் சிலைகள் வைக்க அனுமதி இல்லை. ஆதலால் சிறிய அளவிலான நவக்கிரக ஆலய பீடங்கள் கோபுரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. நுழைவுவாயில் அமைப்பது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம். அங்குள்ள பூங்கா பராமரிப்பை தனியாரிடம் தர திட்டமிட்டுள்ளோம்" என்றார்.