தேனி: ஆப்பிரிக்காவில் கடற்கொள்ளையர்கள் 10 பேரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் தேனியைச் சேர்ந்த பொறியாளரும் ஒருவர். இவரை மீட்க கோரி குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த தனியார் கப்பல் கடந்த 17-ம் தேதி மத்திய ஆப்பிரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்தது. அன்றுமாலை சான்டோ அன்டோனியா பிரின்ஸ் என்ற பகுதியில் 40 கடல் மைல் தொலைவில் இருந்த போது கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலுக்குள் புகுந்தனர்.
பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் கப்பலில் இருந்த 10 பேரை பிணையக் கைதிகளாக பிடித்தனர். பின்பு தாங்கள் வந்த கப்பலில் அவர்களை கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட 10 பேரில், 7 பேர் இந்தியர்கள். 3 பேர் ரோம் நாட்டைச் சேர்ந்தவர்கள் . 7 இந்தியர்களில் ஒருவர் தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் லட்சுமணபிரதீப் (32) ஆவார். இவர் இந்த கப்பலில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடத்தப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் இவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இவர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங்கை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழகஅரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்த தகவலை அனுப்பி உள்ளது.