கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்த முயன்ற இருவர் கைது: ஓசூரில் 7,525 லிட்டர் பறிமுதல்


ஓசூர்: கர்நாடகாவிலிருந்து ஓசூர் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 7ஆயிரத்து 525 லிட்டர் எரி சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

கர்நாடகாவிலிருந்து ஓசூர் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தி வருவதாக, சேலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான போலீஸார் நேற்று இரவு ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தர்கா எனும் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பெங்களூருவிருந்து தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தர்பூசணி பழங்களுக்கு அடியில்எரி சாராயம் கேன்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது. கர்நாடகா மாநிலம் ஹூப்ளியிலிருந்து கேரளா மாநிலத்திற்கு 215 கேன்களில் 7ஆயிரத்து 525 லிட்டர் எரிசாரயாம் கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது.

இதனையடுத்து எரி சாராயத்தை கடத்தி வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சஜித் மற்றும் பாபுராஜ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடி தலைமறைவாக உள்ள கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அனீஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

x