முருங்கைக்காய் கிலோ ரூ.1.50க்கு விற்பனை: சாத்தான்குளம் விவசாயிகள் வேதனை


தூத்துக்குடி: சாத்தான்குளம் பகுதியில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.1.50-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் முருங்கை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் பகுதியில் விளையும் முருங்கைக்காய்களுக்கு வெளியிடங்களில் நல்ல விலை கிடைக்கும். மொத்த வியாபாரிகள், விவசாயிகளிடம் வாங்கி ஏற்றுமதியும் செய்து வருகின்றனர். முருங்கைக்காய் வரத்து ஆண்டு முழுவதும் இருந்தாலும், தரமான விளைச்சல் 6 மாதம் தான் என விவசாயிகள் கூறுகின்றனர்.

தற்போது முருங்கை சீசன் என்பதால், முருங்கைக்காய் விளைச்சல் சாத்தான்குளம் பகுதியில் அதிகரித்துள்ளது. ஆனால், விலை குறைந்து ஒரு கிலோ ரூ.1.50-க்கு மட்டுமே சந்தையில் விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. முருங்கைக்காய்க்கு விலை இல்லாததால் பறிப்பு மற்றும் கட்டும் கூலிக்கு கூட கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்து நஷ்டம் ஏற்படுவதால், முருங்கைக்காயை பதப்படுத்தி பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழக அரசு அறிவித்தபடி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்க வேண்டும் என, முருங்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x