அதிக சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சி தமிழகத்தில் 3-வது இடம்!


மதுரை: தமிழகத்தில் அதிகமான சொத்து வரி வசூல் செய்த மாநகராட்சிகள் பட்டியில், மதுரை மாநகராட்சி 3ம் இடம்பிடித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ரூ.254 கோடியுடன் கூடுதலாக ரூ.4 1/2 கோடி வசூல் செய்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் மொத்தம் ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 103 சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. சொத்து வரி மாநகராட்சியின் பிரதான வருவாய் இனமாக உள்ளது. மத்திய அரசின் நிதிக் குழு மானியம் பெற, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு சொத்து வரி வசூல் செய்வதற்கு குறிப்பிட்ட தொகை இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அந்த வகையில், மதுரை மாநகராட்சிக்கு 2024 - 25ம் ஆண்டு நிதியாண்டில் ரூ.254.53 கோடி வசூல் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த இலக்கை மதுரை மாநகராட்சி எட்டிப் பிடித்ததால் மத்திய அரசின் நிதிக் குழு மானியம் பெறுவதற்கு தகுதி பெற்றது. மேலும், தமிழகத்தில் சொத்து வரி அதிகமான வசூல் செய்த மாநகராட்சிகள் பட்டியலில் மதுரை மாநகராட்சி 3-வது இடத்தை பெற்றது. இந்த பட்டியலில் ஓசூர் மாநகராட்சி முதலிடத்தையும், சேலம் மாநகராட்சி 2-ம் இடத்தையும் பெற்றுள்ளன. சொத்து வரி வசூல் செய்ய வேண்டிய இலக்கை தாண்டி ஓசூர் மாநகராட்சி கூடுதலாக ரூ.8 கோடியும், சேலம் மாநகராட்சி ரூ.7 கோடியும் வசூல் செய்தது. இவர்களுக்கு அடுத்தபடியாக மதுரை மாநகராட்சி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் கூடுதலாக ரூ.4 1/2 கோடி வசூல் செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ”ஓசூர் மாநகராட்சியில் தான் நாட்டிலே மிகப்பெரிய தொழிற்பேட்டைகள் உள்ளன. அவற்றில் டிவிஎஸ், அசோக் லேலண்ட் உள்பட கனரக வாகனங்கள் தயாரிக்கும் ஆயிரக் கணக்கான சிறிய, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. அதுபோல், சேலம் மாநகராட்சியிலும் தொழிற்பேட்டை, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. அதனாலேயே இந்த மாநகராட்சிகள் முதல் 2 இடங்களை பெற்றுள்ளன.

ஆனால், மதுரை மாநகராட்சி முழுக்க முழுக்க சுற்றுலாவை நம்பியே உள்ளது. அதிக சொத்து வரி செலுத்தக் கூடிய தொழிற்சாலைகள் மாநகராட்சி எல்லைக்கு வெளியே உள்ளன. இந்த அடிப்படையில் மதுரை மாநகராட்சி சொத்து வரி அதிகமாக வசூல் செய்த பட்டியலில் 3-வது இடத்தை பெற்றது பெருமைக்குரியது” என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் சித்ராவிடம் கேட்டபோது, ”மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பாக மொத்தம் 112 வழக்குகளே உள்ளன. இவற்றில் சொத்து வரி நிர்ணயம் செய்ததில் உயர் நீதிமன்றத்தில் 9 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றத்தில் 2 வழக்குகள் உட்பட மொத்தம் 11 வழக்குகளில் மட்டுமே தடையானை பெறப்பட்டுள்ளது.

இவற்றில் கூட 7 வழக்குகளில் நீதிமன்றங்கள் 50 சதவீதம் சொத்து வரியை மாநகராட்சி க்கு செலுத்த உத்தரவிட்டுள்ளது. 22 வழக்குகளில் மாநகராட்சி மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்குகளும் விரைவில் முடிக்கப்பட்டு நிலுவையில் உள்ள சொத்து வரி முழுமையாக வசூல் செய்யப்படும். வரும் ஆண்டில் சொத்து வரி வசூலில் முதலிடத்தை மதுரை மாநகராட்சி பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

x