தஞ்சையில் ராஜராஜசோழனுக்கு 100 அடியில் சிலை? - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்!


சென்னை: தஞ்சையில் சோழப் பேரரசன் ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலை வைப்பது தொடர்பான கேள்விக்கு சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

நேற்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஒரத்தநாடு எம்எல்ஏ ஆர்.வைத்தியலிங்கம் பேசும்போது, “தஞ்சை பெரியக் கோயிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு 1972–ம் ஆண்டு சிலை வடிவமைக்கப்பட்டது. ஆனால், தொல்லியல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று கோயிலுக்கு உள்ளே சிலையை வைக்காமல் வெளியே வைத்தார்கள்.

ராஜராஜசோழனின் பெருமையை உணர்ந்து இந்திய கடற்படையின் திட்டங்களிலேயே அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே 216 அடி உயரமுள்ள பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழனுக்கு தஞ்சையில் 100 அடியில் சிலை வைக்க வேண்டும்’’என்றார்.

இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசுகையில், ‘‘மன்னர்களின் புகழை போற்றி பாராட்டும் திமுக ஆட்சியில்தான் ராஜராஜசோழனின் ஆயிரம் ஆண்டு சதயவிழா எடுக்கப்பட்டது.

தற்போது உறுப்பினர் வைத்துள்ள கோரிக்கை குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதற்கு வாய்ப்பிருந்தால் நிச்சயம் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும்” என்று கூறினார்

x