சின்ன வெங்காயம் ரூ.20; பெரிய வெங்காயம் ரூ.15 - வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி!


திருச்சி: உற்பத்தி, வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழகத்தில் திருச்சி, பெரம்பலூர், சேலம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. தவிர, கர்நாடக மாநிலத்தில் இருந்து மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 2 சீசன்களில் உற்பத்தியாகும் சின்ன வெங்காயம், தமிழக மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

நிகழாண்டு தமிழகத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், கடந்த 15 நாட்களாக கர்நாடகாவிலிருந்தும் அதிகளவு வரத் தொடங்கியள்ளது. இதனால் மொத்த விற்பனையில் ரூ.40 முதல் 50 வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது.

அதேபோல மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகளவு பெரிய வெங்காயம் வரத் தொடங்கி உள்ளது. இதனால் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் தலா 200 டன் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் வந்த நிலையில், கடந்த 15 நாட்களாக சின்ன வெங்காயம் 400 டன்னும், பெரிய வெங்காயம் 500 டன்னும் வரத் தொடங்கி உள்ளது.இதனால், கடைகளில் மூட்டை மூட்டையாக வெங்காயம் தேங்கிக் கிடக்கிறது.

இது குறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.தங்கராஜ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு இன்றைய நிலவரப்படி சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் 1,000 டன் வருகிறது. இங்கிருந்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு சின்ன வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது.

விளைச்சல் அதிகரிப்பால் வெங்காயம் மீதான 20 சதவீதம் ஏற்றுமதி வரியை ஏப்ரல் 1ம் தேதி முதல் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏப்.1ம் தேதிக்குப் பிறகு வெங்காயம் விலை சற்று உயர வாய்ப்பு இருக்கிறது என்றார்.

x