புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையத்தில் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறி பயணிகள் நடுமாடும் பகுதியில் கழிவுநீர் பாய்ந்தோடுவதை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் ரூ.18.9 கோடியில் இடித்துக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அதன் அருகே தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நகரப் பேருந்துகள் தவிர, அனைத்து புறநகர் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆண்களுக்கான கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பயணிகள் நடமாடும் பொது இடத்தில் பெருக்கெடுத்து ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது.
உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியும் கூட, தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாக பயணிகள் வேதனையோடு தெரிவித்தனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன் கூறியது: தற்காலிக பேருந்து நிலையத்துக்கு என தனி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், கழிப்பிடங்கள் முறையாக கட்டப்படவில்லை. ஆண்கள் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். தற்காலிக பேருந்து நிலையம் தொடங்கி 1 மாதத்துக்குள் அருவருக்கத் தக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி அலுவலர்கள் கழிவுநீர் வெளியேறாத வகையில் கழிப்பிடத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.