தமிழகம் முழுவதும் பதவி உயர்வு அடிப்படையில் பணிபுரிந்து வரும் டிஎஸ்பி-க்களுக்கு கூடுதல் எஸ்பி-க்களாகவும், கூடுதல் துணை ஆணையர்களாகவும் பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காவல்துறையில் நேரடியாக டிஎஸ்பி-க்களாகவும், மாநகரங்களில் உதவி ஆணையர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். அதேபோல, காவல் ஆய்வாளர்களாக பணியாற்றி வருபவர்களும் பதவி உயர்வு அடிப்படையில் டிஎஸ்பி-க்களாக நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நேரடியாக டிஎஸ்பி-க்களாகவும், உதவி ஆணையர்களாகவும் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வரும் காவல்துறை அதிகாரிகள், தங்களை பணி மூப்பு மற்றும் பதவி உயர்வு அடிப்படையில் காலியாக உள்ள கூடுதல் எஸ்பி மற்றும் கூடுதல் துணை ஆணையர் பணியிடங்களில் நியமிக்காமல், காவல் ஆய்வாளர்களாக இருந்து டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றவர்களை நியமிக்கக்கூடாது என தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.சங்கரன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் வழக்கறிஞர் முகமது முசாமில் ஆகியோர், ‘‘காலியாக உள்ள கூடுதல் எஸ்பி மற்றும் கூடுதல் துணை ஆணையர் பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் நேரடியாக டிஎஸ்பி-க்களாகவும், உதவி ஆணையர்களாகவும் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருபவர்களையே தமிழக அரசு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும். ஆனால், இந்த பணியிடங்களுக்கு முறையான பணி மூப்பு மற்றும் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்காமல் காவல் ஆய்வாளர்களாக பணியாற்றி தற்போது டிஎஸ்பி-க்களாக பணியாற்றி வருபவர்களை தற்காலிகமாக நியமிப்பது என்பது சட்டவிரோதமானது. மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள 197 கூடுதல் எஸ்பி மற்றும் கூடுதல் துணை ஆணையர் பணியிடங்களில் தற்போது பதவி உயர்வு மூலமாக டிஎஸ்பிக்களாக நியமிக்கப்பட்டவர்களே அதிகமாக உள்ளனர். தற்போது தமிழகத்தில் நேரடியாக டிஎஸ்பி-க்களாக நியமிக்கப்பட்ட 4 பேருக்கு மட்டுமே கூடுதல் எஸ்பி-க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பதவி உயர்வு மூலமாக டிஎஸ்பிக்களாக நியமிக்கப்பட்டவர்களை இப்பதவிகளுக்கு நியமிக்க தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதி, தமிழகம் முழுவதும் பதவி உயர்வு மூலமாக டிஎஸ்பிக்களாக பணியாற்றி வருபவர்களுக்கு கூடுதல் எஸ்பி மற்றும் கூடுதல் துணை ஆணையர்களாக நியமி்க்க இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்