கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிபிசிஐடி எஸ்.பி. மாதவன், கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீஸார், இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள், சாட்சிகள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், சந்தேகத்துக்குரிய 18 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறி்த்து சிபிசிஐடி போலீஸார் கூறும்போது, ‘‘கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட நேரத்தில், அதன் பங்குதாரர்களில் ஒருவராக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் இருந்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக, வரும் 27-ம் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றனர்.

x