ஆண்டிபட்டி: வைகைஅணை பூங்காவில் நுழைவுக்கட்டணம் முதல் கழிப்பிடம், வாகனநிறுத்தம் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டிலும் மின்னணு பணபரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வைகை அணையில் சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்குக்காக இரு பகுதிகளிலும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இடது கரை பூங்காவைப் பொறுத்தளவில் சிறுவர்கள் பூங்கா, பல்வேறு வகையான சிலைகள், செயற்கை நீரூற்று உள்ளிட்டவையும், வலது கரையில் உயிரியல் பூங்கா, இசை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. இது தென்மாவட்ட அளவில் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது.
முகூர்த்த நாட்கள், கோடை விடுமுறை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருக்கும். பூங்கா நுழைவுக்கட்டணம் ரூ.5 ஆகும். வார நாட்களில் காலை 6 முதல் மாலை 6 மணி வரையும், சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இரவு 8 மணி வரையும் அனுமதிக்கப்படுகிறது. இதுவரை நுழைவுக்கட்டணம் முதல் இங்குள்ள அனைத்து பயன்பாட்டுக்கும் பணம் செலுத்தும் முறை மட்டுமே இருந்தது.
இந்நிலையில் காலமாற்றத்துக்கு ஏற்ப தற்போது மின்னணு முறையில் பணபரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வைகை அணை உபகோட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “நுழைவுக்கட்டணம் மட்டுமல்லாது, கழிப்பறை, வாகன நிறுத்த கட்டணம், அறை வாடகை, சமுதாயக்கூட பயன்பாடு அனைத்துக்கும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. பழைய முறையில் பணமும் செலுத்தலாம்” என்றனர்.