புதுச்சேரி | இயற்கை சீற்றங்களால் இறக்கும் விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உடனடி நிவாரணம்: அமைச்சர் அறிவிப்பு


புதுச்சேரி: விஷ ஜந்துக்கள், இயற்கை சீற்றங்களால் இறக்கும் விவசாயக்கூலித் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உடனடி நிதி நிவாரணம் வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்தவுடன் வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பதிலளித்து பேசியதாவது: ''விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலித் தொழிலாளர்கள் தங்கள் நிலங்களில் உள்ள பயிர்களுக்கு பகலிலும், இரவிலும் நீர் பாய்ச்சும்போதும், விவசாய நிலங்களை பண்படுத்தும்போதும், எதிர்பாராத விதமாக விஷ ஜந்துக்கள் தீண்டியும், வன விலங்குகளால் தாக்கப்பட்டும், மின்சாரம் மற்றும் மின்னல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் எதிர்பாராமல் இறக்க நேரிடுகிறது.

விவசாயக்கூலித் தொழிலாளர்கள் மறைவுக்குப்பிறகு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது சார்ந்திருப்பவர்களுக்கு முதல்வரின் விவசாயிகள் கூலித்தொழிலாளர்கள் குழு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.5 லட்சம் உடனடி நிதி நிவாரணம் வழங்கப்படும். மேலும் விபத்துகள், விலங்கு தாக்குதல் போன்றவற்றால் ஏற்படும் நிரந்தர ஊனத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்த ரூ 1.50 கோடி செலவாகும்.

அதிக மகசூல் தரக்கூடிய நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு பொதுப்பிரிவுக்கு (இரண்டு பருவம்) ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், பட்டியலினத்தவருக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், பாரம்பரிய நெல் சாதிபடி செய்வோருக்கு ஏக்கர் ஒன்றுக்கு பொதுப்பிரிவுக்கு (இரண்டு பருவம்) ரூ.8 ஆயிரத்தில் இருந்து, ரூ.9 ஆயிரமாகவும், பட்டியலினத்தவருக்கு ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

கரும்பு ஏக்கர் ஒன்றுக்கு(ஒரு பருவம்) பொதுப்பிரிவுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து, 11 ஆயிரமாகவும், பட்டியலினத்தவருக்கு ரூ.11 ஆயிரத்தில் இருந்து, 12 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். புதுச்சேரி விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயன்பெறும் நோக்கில் மதகடிப்பட்டு வாரச்சந்தை இடத்தில் விரைவில் புதிய உழவர் சந்தை செயல்படுத்தப்படும்.

விவசாயிகள் மின் தேசிய வேளாண் விற்பனை சந்தையில் விளைபொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக மதகடிப்பட்டு மற்றும் கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மின் தேசிய வேளாண் விற்பனை சந்தையில் இணைக்கப்படும். அனைத்து விவசாயிகளுக்கும் ஸ்மார்ட் விவசாய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் விவசாய அடையாள அட்டை, விவசாயிகள் பல்வேறு வேளாண் திட்டங்களின் கீழ் பயன் பெற மற்றும் தன்னை அடையாளம் காட்ட உதவும்.

இந்த ஆண்டு விதை நெல்லுக்கு (சான்று விதை) கிலோ ஒன்றுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆகவும். ஆதார விதைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். கால்நடைத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும். முதல்வரின் விவசாய நிலம் இல்லாத கால்நடை வளர்ப்போர் விபத்து காப்பீட்டு திட்டம் புதுச்சேரி அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்போர் விபத்தால் இறந்தால் ரூ.5 லட்சமும் மற்றும் விபத்து மூலம் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும். இதற்காக கூடுதலாக ரூ.50 லட்சம் செலவாகும்.

முழங்கால்களில் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகளை போன்று, நரம்பியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் மோட்டார் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் இறக்க நேரிட்டால் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்படும் இறுதிச் சடங்கு உதவித் தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000-ல் இருந்து ரூ.4,000 ஆகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,400-ல் இருந்து ரூ.6,400 ஆகவும். மேலும், இளநிலை கலை மற்றும் அறிவியல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.5000-ல் இருந்து ரூ.8000 ஆகவும் மற்றும் முதுகலை கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்முறை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.6800-ல் இருந்து ரூ.9800-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கிடையேயான திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒரு மாற்றுத்திறனாளி மற்றொரு மாற்றுத்திறனாளியை திருமண செய்துகொண்டால் வழங்கப்படும் திருமண உதவித்தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாகவும், ஒரு மாற்றுத்திறனாளி சாதாரண நபரை திருமண செய்துகொண்டால் வழங்கப்படும் திருமண உதவித்தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். புதுச்சேரி மகளிர் மற்றம் மாற்றுத்திறனாளி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ்வாழும் ஆதரவற்ற விதவைப் பெண்ணின் மகளின் திருமணத்துக்கான நிதியுதவி ரூ.40 ஆயிரமாகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ்வாழும் மணப்பெண்ணின் பெற்றோருக்கு திருமணத்துக்கான நிதியுதவி ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

ஒன்று-இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெற்றோரின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிதியுதவி ரூ.50 ஆயிரமாகவும், ஏழைப் பெற்றோர்களின் குடும்பத்தில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் ஒரே பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை ரூ.40 ஆயிரமாகவும், விதவை மறுமணத்துக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

இணை உணவு வழங்கும் திட்டம் அனைத்து அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு (கர்ப்பிணி மற்றும் பாலுட்டும்) தற்போது குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை மற்றும் தாய்மார்களுக்கு 1 முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் தினமும் ஒரு முட்டை என்ற முறையில் (வாரம் 6 முட்டை) வரும் நிதியாண்டு முதல் (2025-26) வழங்கப்படவுள்ளது.

மேலும், குழந்தைகளின் சத்து குறைபாட்டை குறைக்க காலையில் அங்கன்வாடிக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கு சிறுதானியங்களாலான Nutri Biscuit மற்றும் வாரம் ஒரு முறை இந்த குழந்தைகளுக்கு பருவக்கால பழங்கள் வழங்கப்படும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x