காரைக்குடி: காரைக்குடியில் கடந்த ஆண்டு பதியப்பட்ட வழக்குக்காக பாஜக மாவட்ட நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர். திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் நாகராஜன் (48). இவர் பாஜக சிவகங்கை மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வல பொதுக் கூட்டத்தில் நாகராஜன் பேசினார். அப்போது இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் நோக்கில் பேசியதாக, அவர் மீது காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில் இன்று அவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல இருந்தனர். அப்போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை காரைக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். கடந்த ஆண்டு பதியப்பட்ட வழக்குக்கு தற்போது கைது செய்யப்பட்டதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.