ஈரோடு மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி நியமனம்: தமிழகம் முழுவதும் 10 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்


சென்னை: தமிழகம் முழுவதும் 10 போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு: 'ராமநாதபுரம் சரக டிஐஜி அபினவ் குமார் மதுரை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சரக டிஐஜி மூர்த்தி ராமநாதபுரம் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி காவல் ஆணையராக உள்ள சந்தோஷ் ஹதிமானி கூடுதலாக திருநெல்வேலி சரகத்தையும் கவனித்துக் கொள்வார்.

இதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் ஆர்.சக்திவேல் காலியாக உள்ள சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு (1) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் வி.பாஸ்கரன் வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சென்னை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையர் மெகலினா ஐடென், சென்னை போக்குவரத்து காவல் கிழக்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் சென்னை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவுக்கு மாறுதலாகி உள்ளார்.

தேனியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கமாண்டெண்ட் (14வது பட்டாலியன்) எஸ்பி வி.கார்த்திக் மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு எஸ்பி ஜி.ஜவகர் சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருப்பத்தூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுஜாதா ஈரோடு மாவட்ட எஸ்.பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.' இவ்வாறு உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவில் தெரிவித்துள்ளார்.


x