பூச்சி தாக்குதலால் மா மரங்கள் 40 சதவீத மகசூல் பாதிப்பு  


பூச்சி தாக்குதலால் பூக்கள் அனைத்தும் உதிர்ந்து நாராக காட்சிதரும் மா மரங்கள். இடம்: வைகைஅணை. | படம்:என்.கணேஷ்ராஜ்.

பெரியகுளம்: மா மரங்களில் கொத்து கொத்தாக பூத்திருந்த பூக்கள் பூச்சித் தாக்குதலால் வெகுவாய் உதிர்ந்து தற்போது நாராக காட்சியளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மா விளைச்சல் 40சதவீதத்துக்கும் மேல் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மா விவசாயம் அதிகம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சோத்துப்பாறை, கோயில்காடு, குழாய்த்தொட்டி, உப்புக்காடு, சின்னாம்பாளையம், சுக்காம்பாறை, கழுதைகட்டி ஆலமரம், கும்பக்கரை, முருகமலை, மஞ்சளாறு, அல்லிநகரம், போடி-சிறைக்காடு, முந்தல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மா மரங்கள் அதிகம் உள்ளன.

பூக்கள் உதிர்ந்து நாராக காட்சி தரும் மா மரங்கள்

காசா, கள்ளாமை, அல்போன்சா, செந்தூரம், மல்கோவா, காதர், பங்கனவள்ளி, காலப்பாடி, கிரேப் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விளைகின்றன. நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன்தரும். 75 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கொண்ட இம்மரம் ஆண்டுக்கு ஒருமுறை விளைச்சல் தரும் தன்மை கொண்டது. குறிப்பாக கோடை காலங்களில் இதன் விளைச்சல் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் கடந்த மாதம் பூக்கள் அதிகம் பூக்கத் தொடங்கி உள்ளன. வழக்கத்தை விட அதிக பூக்கள் பூத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பூஉதிர்வதைத் தடுக்க மருந்து தெளிக்கும் பணியும் நடைபெற்றது. பருவத்துக்கு ஏற்ப வெயிலின் தாக்கமும் அதிகம் இருந்ததால் மகசூல் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தேன்பூச்சி, செல்பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியது.

பெரியகுளத்தில் கடந்த மாதம் இலைகளே தெரியாத அளவுக்கு அடர்த்தியாக பூத்திருந்த மா பூக்கள். படம்:என்.கணேஷ்ராஜ்.

பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி மகரந்தத்தையும் வெகுவாய் சேதப்படுத்தியது. இதனால் கொத்து கொத்தாக பூத்திருந்த பூக்கள் வெகுவாய் உதிரத் தொடங்கியது. இதனை தடுக்க விவசாயிகள் மருந்து தெளித்தும் பலனில்லை. தற்போது பூங்கொத்துக்களில் உள்ள பூக்கள் முழுவதும் உதிர்ந்து வெறும் நார்நாராக காட்சி அளிக்கின்றன. கடந்த ஆண்டு மகசூல் குறைந்த நிலையில் இந்த ஆண்டு அதிக அளவில் பூ பூத்ததால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்நிலையில் ஒவ்வொரு மரத்திலும் பூக்கள் வெகுவாய் உதிர்ந்ததால் விளைச்சலும் வெகுவாய் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வைகைஅணையைச் சேர்ந்த விவசாயி ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ''கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மா மரங்களில் பூக்கள்கொத்து கொத்தாக பூத்திருந்தது. இதனால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் இருந்தோம். தற்போது பூச்சி தாக்குததால் பூக்கள் வெகுவாய் உதிர்ந்து நாராக மாறி விட்டது. இதனால் 40சதவீதத்துக்கும் மேல் விளைச்சல் பாதிக்கும் நிலை உள்ளது'' என்றார்.


x