புதுச்சேரி: ஆளுநர் அலுவலகம் கோப்புகள் மீது சந்தேகத்தை கிளப்புவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அவமானம் என்று எதிர்கட்சித் தலைவர் சிவா தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்துக்கு நீண்ட கால அனுபவம் பெற்றவர் துணைநிலை ஆளுநராக இருக்கிறார். அவருடைய அனுபவத்தை வைத்து பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட சிறப்புக்கூறு நிதி ரூ.500 கோடி அளவில் நிதி எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உள்ளார். ஆனால் அந்த ஆய்வில் அவர் கண்டுபிடித்த குறைகள் என்ன?
அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டனவா என்பது குறித்து இந்த அவைக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு துறையும் கொள்கை முடிவுகளுக்கும், திட்ட அனுமதிக்காகவும், நிதி ஒதுக்கீட்டுக்காகவும் கோப்புகளை முறையாக செயலாளர், தலைமைச் செயலர், முதல்வர் வழியாக ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஆளுநர் அலுவலகம் அந்த கோப்புகள் மீது மீண்டும் சந்தேகத்தை கிளப்பி விசாரணை மேற்கொள்வதும், காலதாமதம் ஏற்படுத்துவதும் திட்டச் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அமைகிறது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மிகப்பெரிய அவமானம். இச்செயல் களையப்பட வேண்டும்.
அரசு ரெஸ்டோ பார் திறப்பதில் காட்டிய ஆர்வத்தை பாசிக் நிறுவனத்துக்கு ரூ.120 கோடிக்கு மது விற்பனைக்கு ஏலம் விட்டிருந்தால் பாசிக் இன்று கடனில் இருந்து மீண்டு இருக்கும். அரசுக்கு வருவாய் ஏற்பட்டிருக்கும். இவ்விஷயத்தில் அரசு தோல்வி கண்டுள்ளது. புதுச்சேரியில் நீண்ட காலமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உள்ளாட்சி நிர்வாகிகள் தடைபடுத்தப்படுவதுடன், நகர் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிப் பணியும் தடைபடுகிறது.
அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வசூலிக்க வேண்டும். அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.44 கோடி வருவாய் கிடைக்கும். இரட்டை என்ஜின் ஆட்சியில் மாநில அந்தஸ்து கேட்டால் கூட உடனே மத்திய அரசு வழங்கும். டெல்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி இருந்ததால் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. தற்போது அங்கும் உங்கள் ஆட்சி தான் இங்கும் உங்கள் ஆட்சிதான். கேட்டால் கொடுப்பார்கள்.
பல வருடங்களாக சர்வதேச மற்றும் தேசியப் போட்டியில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விளையாட்டு கவுன்சிலில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மோசடி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி, அந்த பணத்தை மீட்க வேண்டும். பல்வேறு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கோடிக் கணக்கில் மின்பாக்கி வைத்துள்ளன. இதுபோன்ற இழப்புகளை மக்கள் மீது சுமத்தாமல் காலத்தோடு வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணத்தில் உள்ள பல்வேறு குளறுபடிகளை களைய வேண்டும்.
தமிழகத்தைப்போல் புதுச்சேரியில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும், தமிழகம், காரைக்காலுக்கு ஒரு மாதிரியுமான நிலையை எடுக்கிறது. இது மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை. புதுச்சேரி அரசு, மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு காண வேண்டும். சட்டம்–ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும். ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.