கடலூர்: விருத்தாசலத்தில் குழந்தைக்கு காலாவதியான சொட்டு மருந்தை செலுத்திய தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் செந்தில் குமார் என்பவரின் 9 மாத ஆண் குழந்தைக்கு சொட்டு மருந்து செலுத்துவதற்காக நேற்று முன்தினம் மனைவி சுப்பு லட்சுமியுடன் தனியார் மருத்துவனைக்குச் சென்றார். அப்போது மருத்துவமனையில் சொட்டு மருந்து இருப்பு இல்லாதாதல், வெளியில் உள்ள மருந்தகத்தில் வாங்கி வருமாறு மருத்துவர் கூறினார். இதையடுத்து செந்தில் குமார் சொட்டு மருந்து வாங்கி வந்து மருத்துவர் மூலம் குழந்தைக்கு செலுத்தினர். பின்னர் வீட்டிற்கு சென்று சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து செந்தில்குமாரும், அவரது மனைவியும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், சொட்டு மருந்து பாட்டிலை பார்த்தபோது, ஜனவரி மாதமே காலாவதியானது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு தனியார் மருத்துவனைக்குச் சென்று ஊழியர்களிடம் இதுபற்றி கேட்டனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் செந்தில்குமார் உறவினர்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விருத்தாசலம் போலீஸார், மருத்துவமனை நிர்வாகத்திடமும், செந்தில்குமார் தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தையை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.