கோவை: வேளாண் தொழில்முனைவோர், விவசாய குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனைக்கென தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நவீன விற்பனை மையம் அமைத்து சந்தைப்படுத்தும் வாய்ப்பை வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் கீழ் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை உதவியுடன் 2011ல் தொழில்நுட்ப வணிக காப்பகம் (இன்குபேஷன்) தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் காப்பகத்தில் 580-க்கும் மேற்பட்ட வேளாண் தொழில் முனைவோர், விவசாய குழுக்கள், இளம் பட்டதாரிகள் மற்றும் வேளாண் சார் தொழில் புரிவோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அந்தவகையில் தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனைக்கென நவீன விற்பனை மையத்தை கடந்த 2024-ல் தொடங்கியது. இதில் 43 தொழில்முனைவோர், விவசாயிகள் தங்களது தயாரிப்புப் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இதுகுறித்து, வேளாண் வணிக காப்பக தலைமைச் செயல் அதிகாரி ஞானசம்பந்தம் கூறியதாவது: இந்த மையத்தில் சிறு தானியத்தில் செய்யப் பட்ட குக்கீஸ், புட்டு மாவு, ஸ்டீவியா சேர்க்கப்பட்ட குக்கீஸ், சத்து மாவு, தோசை மாவு, லட்டு, கடலை மிட்டாய், நூடுல்ஸ், முசிலி, ஐஸ் கிரீம் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வாழை நார் சானிட்டரி நாப்கின், மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சோப்பு, ஷாம்பு, மூலிகை அழகு சாதனப் பொருட்கள், மூலிகை பற்பசை மற்றும் பசு சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தூபம், தூபக் குச்சிகள், பஞ்ச கவ்ய விளக்குகள், திருநீறு போன்ற ரசாயனமற்ற பூஜை பொருட்கள் உள்ளன.
முருங்கையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், உலர்த்தப்பட்ட சுவையூட்டப்பட்ட தேங்காய் சிப்ஸ், நாட்டு மாட்டு நெய், பதப்படுத்தப்பட்ட தென்னை நீரா மற்றும் தென்னை நீரா சர்க்கரை, சிப்பி காளான், சுருள் பாசி பொருட்கள், பனை வெல்லம், மரச்செக்கு சமையல் எண்ணெய்கள், ஆர்கானிக் மஞ்சள் தூள், தேன் ஆகியவை உள்ளன.
மூங்கில் மற்றும் தேங்காய் சிரட்டையிலிருந்து செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், தேங்காய் மட்டை மற்றும் தேக்கு மரத்தில் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. காப்பக உறுப்பினராக பதிவு செய்தவர்கள் விற்பனை மையத்தில் பொருட்களை வைக்கலாம். ஒவ்வொரு அடுக்கு பகுதிக்கும் மாத கட்டணமாக ரூ.1500 செலுத்த வேண்டும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இங்கு ரூ.10 தொடங்கி ரூ.1,500 வரை பொருட்கள் உள்ளன. 10 முதல் 15 சதவீத அளவுக்கு விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.