கோவை, திருப்பூரில் 6-வது நாளாக விசைத்தறியாளர் வேலை நிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு


கோவை: பல ஆண்டு காலமாக நீடிக்கும் கூலி உயர்வு பிரச்சினைக்கு மாநில அரசு தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத் தறியாளர்கள் கடந்த 19ம் தேதி முதல் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கடந்த 6 நாட்களில் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இரு மாவட்டங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப் பாதுகாப்புடன் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் விசைத் தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சோமனூர், கண்ணம்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம் வட்டாரங்களில் விசைத்தறிகள் இயங்கவில்லை. இந்த போராட்டத்தால் 1.25 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக, நாளொன்றுக்கு 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி தடைபட்டுள்ளது. கடந்த 6 நாட்களாக நீடித்து வரும் போராட்டத்தால் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களுடன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று காலை (மார்ச் 25) கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

x