சென்னை: சவுக்கு சங்கர் என்னை குறிவைத்து பேசுவதற்கு ஒரு மறைமுக அஜெண்டா உள்ளது. என்னை மாநில தலைவர் பதவிலிருந்து தூக்கிவிட்டு அவருக்கு வேண்டியவரை தலைவராக்க முயற்சி செய்கிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவத்தை நான் கண்டித்திருக்கிறேன். அதற்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வளவு காலமாக மலத்தை அள்ளிவிட்டு அந்த கையை கழுவி மல வாசனையோடு சாப்பிடுவது, குழந்தைக்கு பால் கொடுப்பதும் மாறி முதல்வர் அற்புதமான திட்டத்தை கொண்டுவந்துள்ளார். இதில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்கலாம், நீதிமன்றத்தில் முறையிடலாம். ஆனால் அந்த மக்களை கொச்சைப்படுத்துவது தவறு.
என்மீது அவர் குற்றம்சாட்டியதற்கு நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் காங்கிரஸ் நிர்வாகி இல்லை. அவர் காங்கிரஸ் உறுப்பினர் என்பதற்கான ஆதாரத்தை கொடுக்க சொல்லுங்கள். என்மீது தவறு இருந்தால் சட்டரீதியாக சந்திக்கட்டும். சவுக்கு சங்கர் என்னை குறிவைத்து பேசுவதற்கு ஒரு மறைமுக அஜெண்டா உள்ளது. என்னை மாநில தலைவர் பதவிலிருந்து தூக்கிவிட்டு அவருக்கு வேண்டியவரை தலைவராக்க முயற்சி செய்கிறார். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் என்னை தொடர்பு படுத்தி இப்போது ஏன் பேசுகிறார். இவ்வளவு நாள் அவர் பேசாதது ஏன்?.என்னை திட்டிஅவருக்கு நிறைய பணம் கிடைக்கிறது என்றால் நல்லதுதானே” என்றார்
சென்னையில் நேற்று சவுக்கு சங்கர் வீட்டை துப்புரவு பணியாளர்கள் தாக்கினர். வீடு முழுவதும் மலம் மற்றும் குப்பையை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது. இதனை நேரடியாக அறிந்தவர் கொலை குற்றவாளி திருவெங்கடம், எனவே இந்த கொலை விஷயத்தை வெளியே சொல்லிவிடுவார் என்ற காரணத்தினால் செல்வப்பெருந்தகையை கொலை வழக்கில் இருந்து காப்பாற்ற திருவெங்கடத்தை சென்னை கமிஷ்னர் அருண் என்கவுண்டர் செய்தார். எனது வீட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் செல்வப்பெருந்தகையும், ஆணையர் அருணும்தான் காரணம்” என்று தெரிவித்திருந்தார்.