அண்ணாமலை மீது சேலம் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு; மத கலவரத்தை தூண்ட முயற்சி என புகார்


சேலம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா ஆகியோர் மீது சேலம் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷ் என்பவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா மீது சேலம் மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் திருப்பரங்குன்றம் மலையை பொறுத்த வரை முழுக்க முழுக்க முருகன் மலைக்கு சொந்தமானது என்றும், அங்குள்ள தர்கா ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும் ஊடகங்களில் பேசியுள்ளனர்.

மேலும், லண்டன் நீதிமன்றத்தில் 1931ம் ஆண்டு அதற்கான தீர்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இருவரும் பொய்யாக ஒரு செய்தியை பரப்பி தமிழகத்தில் மதக் கலவரத்தையும், வன்முறையையும் தூண்ட முயற்சிக்கின்றனர். எனவே, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் அதற்கான ஆவணங்களை காவல் துறையினர் கேட்டிருந்தனர். அதன்படி ஆவணங்களை நேற்று அவர் சமர்ப்பித்தார். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x