புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் புத்தக வடிவில் ரேஷன்கார்டுகள் தரப்படவுள்ளது. கலைமாமணி விருதில் புகைப்படக்கலை, பேச்சுக்கலை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திருமுருகன் தெரிவித்தார்.
மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திருமுருகன் பதிலளித்து பேசியதாவது: ''கலை பண்பாட்டுத் துறையில் அனைத்து நூலகங்களும் டிஜிட்டல் மயமாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் முதல் கட்டமாக அரசு கட்டிடங்களில் இயங்கும் நூலகங்கள் மட்டும் உடனடியாக டிஜிட்டல் மயமாக்கப்படும். மேலும் கட்டிங்களும் புதுப்பிக்கப் படும்.
2025-26 நிதி ஆண்டில் கலைமாமணி / தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படும். புதிதாக புகைப்படக்கலை & பேச்சுக்கலை சேர்க்கப்பட உள்ளது. காரைக்கால் அம்மையார் பெயரில் இயல், இசை, நாடகம் பிரிவுகளில் விருது வழங்கப்பட உள்ளது. காரைக்கால் பழைய நீதிமன்ற வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்கப் படவுள்ளது. புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் கீழ் காமராசர் கல் வீடு கட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு மாநில அரசின் பங்காக 2.75 லட்சமும் மத்திய அரசின் பங்காக 2.25 லட்சம் ஆக மொத்தம் 5 லட்சம். காமராசர் பிரதமர் ஒருங்கிணைக்கப்பட்ட வீடு கட்டும் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டமாக செயல் பாட்டிற்கு மிக விரைவில் வர இருக்கிறது.
அதற்கான அரசானை விரைவில் வெளியிடப்படும். சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்குவதில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் விதிமுறைகளில் தற்காலத்துக்கு ஏற்ப விதிமுறைகளில் திருத்தம் செய்ய உத்தியோசிக்கப்பட்டுள்ளது. சிகப்பு அட்டை தவிர மற்ற உணவு பங்கீட்டு அட்டை தொடர்பான அணைத்து சேவைகளும் பொது சேவை மையம் மூலம் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும். தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய குடும்ப அட்டைகள் புத்தக வடிவில் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தகுதி வாய்ந்த அனைத்து குடும்ப அட்டைகளுக்கு 2 கிலோ கோதுமை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீட்டு வசதி வாரியம் சொந்தமான ஒரு சில இடங்களை மட்டும் தேர்வு செய்து இ ஏலம் மூலம் விற்பனை செய்யும் பட்சத்தில் ஒரு பெரும் தொகையை முதலீட்டிற்க்கு உருவாக்க முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. விரைவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வீட்டு வசதி வாரியம் சிறப்பாக செயல்பாட்டிற்கு வர இருக்கிறது'' என்றார்.