புதுச்சேரி: ஆதிதிராவிடர், பழங்குடியினர் பைபாஸ் சர்ஜரிக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி தரவிரைவில் அரசாணை வெளியாகவுள்ளது. அம்பேத்கர் யாத்ரா விரைவில் அமலாகிறது என்று அமைச்சர் சாய் சரவணன்குமார் அறிவித்தார். எம்எல்ஏக்கள் கோரிக்கையேற்று வீடு கட்ட நிதியுதவி ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் பதிலளித்து பேசியதாவது: ''ஆதிதிராவிடர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களில் பயன்பெற வருவாய் உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மின்சக்தி மூலம் ஆட்டோ ஓட்ட உரிமம் பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மின் ஆட்டோ வாங்க மானியம் வழங்க வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அமலுக்கு வரும்.
அம்பேத்கர் தொடர்புடைய இந்தியாவில் நான்கு தலங்களுக்கு ஆண்டுதோறும் செல்ல அம்பேத்கர் யாத்ரா அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அமலுக்கு வரும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் உயர் மருத்துவ சிகிச்சை செய்ய (பைபாஸ் சர்ஜரி) புதுச்சேரி மருத்துவ நிவாரண சங்கத் திட்டத்துடன் இணைந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க கோப்பு அனுப்பியுள்ளோம். விரைவில் அரசாணை வெளியாகும்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோருக்கு வாய்ப்பு ஊதியத்தொகை ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளர்கள், சக்கிலியர்கள் இன மக்களின் கோரிக்கையை ஏற்று தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை 1 முதல் 5ம் வகுப்பு வரை படிப்போருக்கு ரூ.1500ல் இருந்து ரூ.5000ம், 6 முதல் 8ம் வகுப்பு வரை பிடிப்போருக்கு ரூ.2500ல் இருந்து ரூ.8000ம் உயர்த்த ஆணை விரைவில் வெளியாகும்.
முதல்வரின் புதுமைப்பெண் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ. 1 லட்சம் வரை வழங்க வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அமலுக்கு வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயனாளிகள் வீட்டு மாடியில் சூரிய மின்தகடு நிறுவ ரூ.1 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். புத்தக சுமையை குறைக்க 5 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கற்றலுடன் கூடிய மென்பொருளுடன் கூடிய கைக்கணினி தர கோப்பு அரசுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அமலுக்கு வரும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தனியான அடையாள அட்டை தரப்படவுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் 50 சதவீதம் மேல் வசிக்கும் கிராமங்கள் தேர்வு செய்து 3 ஆண்டுகளுக்கு அக்கிராமங்களில் உள்கட்டமைப்பு மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்துக்கும் ரூ.50 லட்சம் தரும் திட்டம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். வெளிநாட்டுக்கு மேல்கல்வி படிக்க வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதி கோயில்களுக்கு தரப்படும் உதவித்தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தி விரைவில் ஆணை வெளியாகும். ஆதிதிராவிடர் நலத்துறை தகுதியான பயனாளிகளை கண்டறிந்து இலவச மனைப்பட்டா குடியிருப்பு தர நடவடிக்கை எடுக்கும். 3000 ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இலவச மனைப்பட்டா வரும் ஆகஸ்ட் 15ல் தரப்படும்.
கடற்கரைச்சாலை அம்பேத்கர் மணி மண்டபம் ரூ.3 கோடியில் நவீன தொழில்நுட்பத்துடன் புனரமைக்கப்படும். சிறுபான்மையினர் ஏழை குடும்ப பெண்களுக்கு திருமண நிதியுதவி தரப்படும். தகுதியான சிறுபான்மையினருக்கு இலவச மனைப்பட்டா தரப்படும். ஹைமாஸ் விளக்குகள் புதிதாக அமைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டம் 2.0 கீழ் நிதியுதவியை உயர்த்த கோரினர். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி, ''மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.5.50 லட்டத்திலிருந்து ரூ.6.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது எம்எல்ஏக்கள் கோரிக்கை ஏற்று ரூ.7 லட்சமாக உயர்கிறது. பாட்கோவுக்கு விரைவில் நிரந்தர நிர்வாக இயக்குநர் நியமிக்கப்படுவார்'' என்று அறிவித்தார்.