பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்: நாகர்கோவில் ஓட்டலுக்கு சீல் வைப்பு


நாகர்கோவிலில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பெரிய விளையை சேர்ந்த 4 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 17 பேர் அடங்கிய குடும்பத்தினர் நேற்று நாகர்கோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றனர். பின்னர் அவர்கள் நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பால் பண்ணை அருகே உள்ள லியாகத் என்ற அசைவ ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். அங்கு அனைவரும் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டனர். (குடும்பமாக சாப்பிட வருபவர்களுக்கு குறிப்பிட்ட விலைக்கு பெரிய தட்டில் பிரியாணி மற்றும் இறைச்சி துண்டுகளை மொத்தமாக வைத்து பரிமாறுவதற்கு பெயர் தான் மந்தி பிரிியாணி) பின்னர் அவர்கள் புறப்பட்டு ஊருக்கு சென்றனர்.

அப்போது திடீரென பிரியாணி சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 15 பேர் குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், இருவர் நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் பிரியாணி சாப்பிட்ட ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். அங்கு தயார் செய்து வைத்திருந்த உணவு மாதிரிகளை பரிசோதித்த போது, மனித உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும் வகையில் உணவு வகைகளை தயார் செய்ததும், தரமில்லாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஓட்டலை அதிகாரிகள் மூடி, சீல் வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் உணவு தரமாக தயார் செய்யப்படுகிறதா? என சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

x