மதுரை: முல்லை பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் கடந்த 22ம் தேதி முதல் முறையாக ஆய்வு நடைபெற்றது. இதில் தமிழக அதிகாரி பாதியிலேயே வெளியேறியது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் சில மாதங்களுக்கு முன்பு தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில்ஜெயின் தலைமையில் ஏழு பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டது.
தற்போது இக்குழுவில் தமிழகம் சார்பாக கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழில் நுட்ப நிபுணர் ஆர்.சுப்ரமணியன், கேரள அரசு சார்பாக கூடுதல் தலைமை செயலர் டிங்கு பிஸ்வால், கேரள நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் ஆர்.பிரியேஷ், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய ஆராய்ச்சியாளர் விவேக் திரிபாதி, பெங்களூரில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆனந்த் ராம சாமி ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இக்குழு பெரியாறு அணையை ஆய்வு செய்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த பிப்.19-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் கடந்த 22-ம் தேதி பெரியாறு அணையில் முதல்முறையாக இக்குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வு நடந்து கொண்டிருந்த போதே தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா அணையில் இருந்து வெளியேறினார். விமானத்தில் செல்ல சரியான நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முதல் ஆய்வு என்பதால் தமிழக விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆய்விலும், ஆலோசனை கூட்டத்திலும் தமிழக அதிகாரிகள் வலியறுத்துவர் என்று ஆர்வமுடன் இருந்தனர். இந்நிலையில் தமிழக அதிகாரியே ஆய்வை புறக்கணித்து கிளம்பிச் சென்றது விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் கூறுகையில், குழுவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத கேரள நீர்வள ஆணைய நிர்வாக இயக்குநர் ஜீவன்பாபு உள்ளிட்ட கேரளாவைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் விதிமுறைகளை மீறி கும்பலாக வந்துள்ளனர். அதில் பலர் அணையின் உரிமை குறித்து தமிழகத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து பேசியுள்ளனர். தமிழக அதிகாரிகள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மேலும் குழு அமைக்கப்பட்ட போது இடம்பெற்றிருந்த கேரள தலைமை பொறியாளர் விஸ்வாசுக்குப் பதிலாக டிங்கு பிஸ்வால் திடீரென சேர்க்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களை மாற்ற முடியாத நிரந்தர அமைப்பு இது. இந்த விதிமுறை மீறல் குறித்து கூட தமிழக அதிகாரிகள் பேசவில்லை.
ஆய்வின் போது கேரள அதிகாரிகள் அதிகளவில் வந்து ஆதிக்கம் செலுத்தியது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆய்வை பாதியிலே விட்டுச் சென்ற மங்கத்த ராம் சர்மாவை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.