பொதுமக்கள் வரி செலுத்தாவிட்டால் கடப்பாரையை அவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று குடிநீர் இணைப்பை துண்டிக்கும் மாநகராட்சி நிர்வாகம், அதிகவரி நிலுவை வைத்துள்ளவர்களை ஏன் கண்டுகொள்வதில்லை என திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: தனபாலன் (பாஜக): 14-வது வார்டில் பல ஆண்டுகளாக நடந்து வரும் பூங்கா பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒப்பந்ததாரர் பணியை உரிய காலத்தில் முடிக்காவிட்டால் ஏன் பணியை தருகிறீர்கள்.
மேயர்: கவுன்சிலரின் கோரிக்கை ஆய்வு செய்யப்பட்டு, அந்த பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தனபாலன் (பாஜக): பாதாள சாக்கடை முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் 14-வது வார்டில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய வேண்டும்.
மேயர்: கூடிய விரைவில் பாதாள சாக்கடை பிரச்சினையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது, திமுக கவுன்சிலர் ஆனந்தன் குறுக்கிடவே, நான் எனது வார்டை பற்றி பேசுகிறேன், அதற்கு அதிகாரிகள் பதில் சொல்லட்டும், நீங்கள் ஏன் இடையில் பேசுகிறீர்கள் என தனபாலன் கூறவே, பாஜக, திமுக கவுன்சிலர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, பட்ஜெட் குறித்து விவாதம் வந்தது. அதில் தனபாலன் (பாஜக): மாநகராட்சி பட்ஜெட்டில், அலுவலர் சரவணன் என்பவர் கையாடல் செய்த ரூ.4.66 கோடி குறித்து எந்தத் தகவலும் இல்லை. அந்தத் தொகை மாநகராட்சிக்கு இழப்பு. அந்தத் தொகை குறித்து பட்ஜெட்டில் காட்டப்படவில்லை ஏன்?
சிவக்குமார் (ஆணையர்): இது குறித்து அலுவலகத்துக்கு தனியாக வந்தால் பதில் சொல்கிறேன்.
ஜான் பீட்டர் (திமுக): மத்திய அரசின் பிஎஸ்என்எல் அலுவலகம் ரூ.46 லட்சத்துக்கும் மேல் வரிபாக்கி வைத்துள்ளது. இந்த வரியை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாமர மக்கள் வரி செலுத்தாவிட்டால் கடப்பாரையை அவர்கள் வீட்டுக்கு கொண்டுசென்று குடிநீர் இணைப்பை துண்டிக்கிறீர்கள். இந்த பெரிய தொகை கிடைத்தால் வரிவசூலில் இலக்கை எளிதாக எட்டலாம்.
பொறியாளர் கருப்பையா: சில தினங்களில் பிஎஸ்என்எல் அலுவலக வரிக்கான காசோலை வர உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
தொடர்ந்து, கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கைகளை முன்வைக்க, கூட்டம் முடிந்துவிட்டதாகக் கூறி மேயர் எழுந்து சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய எதிர்க்கட்சி கவுன்சிலர்கள், ‘கவுன்சில் கூட்டமும் முறையாக கூட்டுவதில்லை, நடைபெறும் கூட்டத்திலும் வார்டு பிரச்சினை குறித்து பேச அனுமதிப்பதில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகள் குறித்து உங்களிடம்தான் முறையிட வேண்டியிருக்கிறது’ என்றனர்.