தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவந்து பல்கலைக்கழகங்களில் காலியாகவுள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக்கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம், வரும் மே 19-ம் தேதி நிறைவடைகிறது. மேலும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதுவரை புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தால் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை உருவாகிவிடும்.
பல்கலைக்கழங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம், துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியைச் சேர்க்க வேண்டுமா, வேண்டாமா என்பது தொடர்பாக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல்தான். இந்த மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. இந்த சிக்கலுக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும்.
பல்கலை துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் இடைக்காலத் தீர்ப்பு பெறுவது அல்லது வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளின் மூலம் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்