ஊத்தங்கரை அருகே கொடிக் கம்பம் அகற்றியபோது, மின்சாரம் பாய்ந்ததில், திமுக நிர்வாகி உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை ஏப்ரல் 28-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் எனக் கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களை, அந்தந்த அரசியல் கட்சியினர் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஊத்தங்கரை அருகே கேத்துநாயக்கனப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த திமுக கொடிக் கம்பத்தை அகற்றும் பணியில், திமுக கிளைச் செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் பூபாலன், ஆறுமுகம், பெருமாள், சக்கரை ஆகியோர் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாகச் செல்லும் மின் ஒயரில் கொடிக் கம்பம் உரசியது. இதில், ராமமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், படுகாயம் அடைந்த 5 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிதியுதவி: இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ மதியழகன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறும்போது, “மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ராமமூர்த்தியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் மற்றும் ஈமசடங்குக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த 4 பேரின் சிகிச்சைக்காக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் கொடிக்கம்பம் அகற்றும்போது, மிகக் கவனத்துடன் கையாள வேண்டும்” என்றார்.