அரசு ஒப்பந்தப் பணிகளில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு: எஸ்டிபிஐ கோரிக்கை


சென்னை: அரசு ஒப்பந்தப் பணிகளில் கர்நாடகாவைப் போன்று தமிழகத்திலும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக அரசு, 1999ம் ஆண்டு இயற்றப்பட்ட கர்நாடக பொது கொள்முதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், அரசு ஒப்பந்தப் பணிகளில் மதச் சிறுபான்மையின ருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது. இந்தத் திருத்தத்தின்படி, ரூ.2 கோடி மதிப்பு வரையிலான சிவில் ஒப்பந்தப் பணிகள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பு வரையிலான பொருட்கள் மற்றும் சேவைகள் கொள்முதல் ஒப்பந்தங்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையின ருக்கு 4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, சிறுபான்மை சமூகத்தினரிடையே நிலவும் வேலையின்மை, வறுமை மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க முடியும் என கர்நாடக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இம்முடிவை மத அடிப்படையிலான சலுகையாகக் கருதாமல், சமூகத்தில் பின் தங்கியுள்ள பிரிவினருக்கு வழங்கப்படும் நியாயமான உரிமையாக அணுக வேண்டும் என கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆயினும், இந்த மாநில உரிமை சார்ந்த முடிவுக்கு எதிராக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இது மாநில அரசுகளின் சுயாட்சிக்குச் சவால் விடும் செயலாகவும், சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீடு கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் பாஜகவின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கையாகவும் உள்ளது.

கர்நாடக அரசின் இந்த முன்னெடுப்பை முன்மாதிரியாகக் கொண்டு பாஜக ஆளாத அனைத்து மாநிலங்களும் செயல் படுத்த வேண்டும். குறிப்பாக சமூக நீதியை தனது ஆட்சியின் அடித்தளமாகக் கொண்டுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையின மக்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக, அரசு ஒப்பந்தப் பணிகளில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும். இதற்காகச் சிறப்புக் குழு ஒன்று அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்பந்தப் பணிகளில் சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விதிமுறைகளை விரைவாக வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தகைய நடவடிக்கையின் மூலமாக, பாஜகவின் சிறுபான்மை விரோத கொள்கை மற்றும் இட ஒதுக்கீடு கொள்கை களுக்கு எதிரான, உறுதியா ன நிலைப் பாட்டைத் தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும். தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான சமூகநீதி கொண்டது என்பதை உறுதி செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

x