திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து


மதுரை: திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக்கோரி விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “திருப்பரங்குன்றம் மலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மலையாகும். இந்த மலை சமணர் மலையாகும். எனவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கவும், மலையில் சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளத் தடை விதித்தும், திருப்பரங்குன்றம் மலையை மீட்டு பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இதேபோல், “திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாஷா தர்காவினர் கால்நடைகளை பலியிடவும், அசைவம் சமைக்கவும், அசைவ உணவு பரிமாறுவும் தடை விதிக்கக்கோரி” மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த சோலை கண்ணனும், “திருப்பரங்குன்றம் மலையின் மேலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை கோரி” ராமலிங்கம் என்பவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று (மார்ச் 24) விசாரணைக்கு வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: “திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள அருள்மிகு 18ம் படி கருப்பசாமி திருக்கோயில், பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில், மலையாண்டி கருப்பசாமி திருக்கோயில் மற்றும் முனியப்பன் கோயில்களில் கால்நடைகளை பலியிடும் வழக்கம் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையின் வடக்கு பகுதியில் முருகன் கோயிலும், தென் பகுதியில் சமண அடையாளங்களும், இடைப் பட்ட பகுதியில் தர்காவும் அமைந்துள்ளன. இந்து மக்களால் ‘ஸ்கந்தமலை’ என்றும், இஸ்லாமியர்களால் ‘சிக்கந்தர் மலை’ என்றும், சமண சமயத்தவர்களால் ‘சமணர் குன்று’ என்றும், உள்ளூர் மக்களால் ‘திருப்பரங்குன்றம் மலை’ என்றும் அப்பகுதி அழைக்கப்படுகிறது. தமிழக அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது.

அதன் அடிப்படையில் ஜனவரி 30ம் தேதி இரு சமயத்தினர் இடையே அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், “தர்காவிற்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து அனைவருக்கும் பரிமாறி சாப்பிடுவர். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினரும் ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், தங்களுடைய இந்த நடைமுறையில் வெளி நபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்” என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

அதோடு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தை சேர்ந்தவர்களும் இதுபோல வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாறுவது இங்கு வழக்கமாக உள்ளது. அதோடு 1991ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கான சிறப்பு விதிகளின்படி 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஒரு வழிபாட்டு தலம் எப்படி இருந்ததோ, அதே முறையிலேயே பராமரிக்கப்பட வேண்டும்,” என்று பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

அரசு தரப்பில், “திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது” என தெரிவிக்கப்பட்டது. மத்திய தொல்லியல் துறை, “திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்கு சொந்தமானது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் எதைச் செய்தாலும் மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” எனக் கூறப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், “இது தொடர்பாக 1923-ல் மதுரை முதன்மை அமர்வு வழங்கிய உத்தரவை பிரிட்டிஷ் கவுன்சில் உறுதி செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி்கள், “கடவுள்கள் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள் தான் சரியாக இல்லை” எனத் தெரிவித்து, தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலை தங்களுக்கு சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலை அனைவருக்கும் சொந்தமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தொல்லியல் துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் தரப்பில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான உத்தரவுகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்.7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

x