புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சை பெரிதாக எடுக்கக்கூடாது, இதைப் பற்றி கவலைப்படக்கூடாது என முதல்வர் ரங்கசாமி கருத்து தெரிவித்தார். அதேபோல் நாராயணசாமியை பேரவைத்தலைவர், அமைச்சர், எம்எல்ஏ ஆகியோரும் விமர்சித்தனர்.
புதுவை சட்டப்பேரவையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ் குமார் பேசுகையில், "முத்தியால்பேட்டையில் உப்புத்தன்மையுடன் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக கூறி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது தவறான தகவல்களை நாராயணசாமி தெரிவித்தார். 2017ம் ஆண்டு அக்டோபரில் முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீரில் 6 ஆயிரம் என டிடிஎஸ் அளவு இருந்தது. இதற்காக அப்போது முதல்வராக இருந்த நாராயணசாமியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அவர் ஆட்சி முழுவதும் சுகாதாரமான குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் பூஜை போட்டு பாதியில் நின்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டியை கட்டிமுடித்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் திறந்தோம். தற்போது விநியோகம் செய்யப்படும் குடிநீரில் ஆயிரத்துக்கும் கீழ்தான் டிடிஎஸ் அளவு உள்ளது.
இதையெல்லாம் மறைத்து பொய்யான தகவல்களை நாராயணசாமி பரப்புகிறார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது"என பேசினார். அப்போது பேரவைத்தலைவர் செல்வம் குறுக்கிட்டு, "அவர் முத்தியால்பேட்டையில் மட்டுமல்ல, புதுவை முழுவதும் எந்த தொகுதிக்கு போனாலும் பொய்யான தகவலைத்தான் கூறுவார்" என்றார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன் குறுக்கிட்டு, "மறந்தும்கூட அவர் உண்மையை பேச மாட்டார்" என்றார். முதல்வர் ரங்கசாமி, "எனது அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறது. எத்தனையோ சிரமம், நிதி நெருக்கடி இருந்தாலும், திட்டங்களை செயல்படுத்துவதில் குறை வைப்பதில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் பேசும் இடமெல்லாம், நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தவில்லை என்று தான் பேசுவார்.
சமீபத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 உதவித்தொகை உயர்த்தினோம். இதுபற்றி நாராயணசாமி பேசும்போது, இந்த நிதி கிடைப்பதற்குள் பெண்கள் இறந்துவிடுவார்கள் என கூறியுள்ளார். இதிலிருந்தே அவர் எண்ண ஓட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவர் பேச்சைப்பற்றி நாம் கவலைப்படக்கூடாது, அவர் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அவரை பற்றி புதுவை மக்களுக்கு தெரியும்" என பேசினார்.