‘சென்னை காவல் ஆணையர் அருணின் உத்தரவில்தான் என் வீட்டின் மீது தாக்குதல்’ - சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு


சென்னை: இந்த புதிய வீட்டுக்கு நான் குடிவந்து 3 மாதமே ஆகிறது. காவல்துறையை தவிர நான் இந்த வீட்டில் இருப்பது யாருக்கும் தெரியாது. எனவே சென்னை மாநகர ஆணையர் அருண் அவர்களின் உத்தரவின் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது என பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

இன்று பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் 50 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து சாக்கடையையும், மலத்தையும் கொட்டியது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சவுக்கு சங்கர், ‘நான் 9.45க்கு வீட்டில் இருந்து கிளம்பி சென்றேன். அப்போது சிலர் எனது வாகனத்தை துரத்தி வந்து கல்லெறிந்தனர். இரண்டு மினி பேருந்து முழுவதும் மக்கள் வந்தனர். நான் சுதாரித்துக்கொண்டு அம்மாவுக்கு போன் செய்து, யார் கதவை தட்டினாலும் திறக்க வேண்டாம் என சொன்னேன். மேலும், நான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சொன்னேன். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்து சாக்கடை, மலத்தை வீடு முழுவதும், அனைத்து பொருட்களின் மீதும் ஊற்றியுள்ளனர். என் அம்மாவையும் தாக்க முயற்சித்துள்ளனர்.

நான் துப்புரவு தொழிலாளர்களை இழிவாக பேசியதாக சொல்லியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று யூகிக்கிறேன். துப்புரவு தொழிலாளர்களுக்கு வாகனம் வாங்கி தருவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஏமாற்றி கொள்ளையடிக்கிறார் என, துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாகவே பேசினேன். நான் அவர்களை இழிவாக எந்த இடத்திலும் பேசவில்லை. செல்வப்பெருந்தகையும், ரவிக்குமார் நாராயணன் என்பவரும் சேர்ந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு சேரவேண்டிய 230 வாகனங்களை தங்களுக்கு தெரிந்தவர்கள் பேரில் பதிவு செய்து ஏமாற்றுகிறார் என சொல்லியிருந்தேன்.

என் அம்மா பெயரில் உள்ள சொந்த வீட்டுக்கு சீல் வைத்துள்ளார்கள். எனவே இந்த புதிய வீட்டுக்கு நான் குடிவந்து 3 மாதமே ஆகிறது. காவல்துறையை தவிர நான் இந்த வீட்டில் இருப்பது யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கையில் தூய்மைப்பணியாளர்கள் எப்படி நேராக என் வீட்டுக்கு வந்து இறங்குகிறார்கள். சென்னை மாநகர ஆணையர் அருண் அவர்களின் உத்தரவின் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது எனக்கு நேரடியாக விடுக்கப்பட்ட கொலை மிரட்டல். நான் வாழவே கூடாது என நினைக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்

x