புதுக்கோட்டை: தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது. அதேவேளையில், சாலையில் இறங்கி பிரச்சினை செய்ய முடியாது என மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால், வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கும். இதன்மூலம் தென் மாநிலங்களின் தயவின்றி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கலாம் என பாஜக கருதுகிறது. அப்படியொரு சூழல் வந்தால், தென் மாநிலங்களுக்கு நிதி குறைப்பு செய்யப்படுவதுடன், மக்கள் நலத் திட்டங்களும் வராது.
எனவே, மக்களவைத் தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டும் என்ற நம் கோரிக்கைக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை. தமிழகத்தின் உரிமையை பறிக்கும் இந்தச் செயலை ஆதரிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான். காவல்துறை மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகம் நடப்பதாக குற்றம்சாட்ட பாஜகவினருக்கு தகுதி இல்லை.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது. இதுகுறித்து மதிமுக தலைவர் வைகோ, தமிழக முதல்வரிடம் வலியுறு த்தி உள்ளார். அதேவேளையில், கூட்டணியில் இருப்பதால் இதற்காக சாலையில் இறங்கி பிரச்சினை செய்ய முடியாது. ஜாக்டோ- ஜியோ கூட்டமைப் பின் கோரிக்கைகளை அரசு விரைந்து தீர்க்க வேண்டும். 2026 தேர்தலில் நடிகர் விஜயின் கட்சி, தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.