காசநோய் எப்படி பரவும்? சிகிச்சை முறைகள் என்னென்ன? - அறியவேண்டிய தகவல்கள்!


புதுக்கோட்டை: காசநோயைக் கட்டுப்படுத்தவும், அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் மார்ச் 24ம் தேதி உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தொற்று நோயான காசநோய், சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

காசநோய், தடுப்பு மற்றும் சிகிச்சைகள் குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரின் நுரையீரல் மற்றும் காசநோய் பிரிவு உதவி பேராசிரியர் எம்.மதியழகன், 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியது: காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது வாழ் நாளில் 10 பேரை பாதிப்படையச் செய்கிறார். இருமல், தும்மல் மூலம் காசநோய் கிருமி காற்றில் பரவி மற்றவர்களைப் பாதிக்கிறது. இந்நோய், நுரையீரல் மட்டுமின்றி மூளை, எலும்பு, இதயம் , சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளையும் பாதிக்கச் செய்கிறது.

2 வாரங்களுக்கும் மேல் தொடர் இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, எடை குறைதல், பசியின்மை, சளியில் ரத்தம் வருதல் போன்றவை காச நோய்க் கான அறிகுறிகள். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

டாக்டர் எம்.மதியழகன்

காசநோய் இல்லாத தமிழகம் என்ற குறிக்கோளுடன் காசநோயை கண்டறிவதற்கான டிஜிட்டல் எக்ஸ்ரே, உயர் தொழில் நுட்பக் கருவிகளைக் கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சளி பரிசோதனை செய்யப்படுவதுடன், காச நோயால் பாதிக்கப்பட்டோருக்கு தொடர் சிகிச்சையும், உதவித் தொகையும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. நடமாடும் மருத்துவ வாகன சேவையும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், காச நோய் தடுப்பு மருந்து 3 மாதங்களுக்கும், காச நோய் எதிர்ப்பு மருந்து 6 மாதங்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

அதிக புரதச்சத்துள்ள முட்டை, மீன், இறைச்சி, கொண்டைக் கடலை, பயறு வகைகள், சிறு தானியங்களை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, காசநோய் பாதிப்பு இல்லாமல் தடுக்க முடியும். இருமல், தும்மல் உள்ளவர்கள் முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டும். முறையாக கை கழுவ வேண்டும். இத்தகைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் காச நோய் தொற்று பாதிப்பின்றி வாழலாம் என்றார்.

x